கோவையில் சாலையில் கிடந்த கைப்பையை போக்குவரத்து போலீஸ்காரர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் தங்கராஜ். அவர் நேற்று லட்சுமி மில்லில் இருந்து ரெட்பீல்ட் செல்லும் ரோட்டில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அங்குள்ள பைக் ஷோரூம் எதிரே சாலையில் ஒரு கைப்பை இருப்பதை பார்த்தார். உடனே அவர் அதை மீட்டு சோதனை செய்தார். அதில் செல்போன் ஏ.டி.எம். கார்டு, பணம் 1500 ரூபாய் இருந்ததை பார்த்தார்.
பின் அங்கிருந்தவர்களிடம் அந்த கைப்பை குறித்து விசாரித்தபோது அவர்கள் யாருடையது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் போலீஸ்காரர் தங்கராஜ் அந்த கைப்பையை பேரிகார்டில் தொங்கவிட்டு யாராவது தேடி வருகிறார்களா எனப் பார்த்தார்.
ஆனால் யாரும் வரவில்லை. தொடர்ந்து அவர் அந்த கைப்பையை போக்குவரத்து போலீஸ் அறையில் வைத்து தனது பணியை கவனித்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து தங்கராஜ் அறைக்கு வந்தபோது கைப்பையில் இருந்த செல்போனில் அழைப்பு வந்தது.
அதில் பேசிய பெண், அந்த கைப்பை தன்னுடையது என்றும், எவ்வாறு தொலைந்தது என்று தெரியவில்லை எனவும் பதற்றத்துடன் கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்திய தங்கராஜ் கைப்பை மற்றும் அதில் இருந்த பொருட்கள் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும், லட்சுமி மில் பகுதியில் வந்து பெற்று கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். அதன் பின் அந்த பெண் அங்கு வந்து போலீஸ்காரர் தங்கராஜூக்கு நன்றி தெரிவித்து தனது கைப்பை பெற்று சென்றார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“