கோவை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர், ஈச்சனாரி சுந்தராபுரம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ளனர். ஒரு சில மாணவர்கள் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இவர்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வருவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் ஈடுபடுவதாக குடியிருப்புவாசிகள் தொடர்ச்சியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் புறநகர் பகுதியில் ஒன்று கூடும் கல்லூரி மாணவர்கள் குழு சண்டையிட்டுக் கொள்வதும், கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சண்டை இட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தன.
இதனை தொடர்ந்து இன்று கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்களோ, போதை பொருள்களோ சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இன்று பிற்பகல் வரை தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மாணவர்களிடம் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்கும் விதமாக நடைபெற்ற சோதனை குறித்து துணை ஆணையர் ஸ்டாலின் சரவணம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“