/indian-express-tamil/media/media_files/2025/04/10/seByL7KvU1a8qYkOhaFX.jpg)
கோவை மாவட்ட அ.தி.மு.க.வில் முக்கிய புள்ளியாக இருந்தவர் வடவள்ளி சந்திரசேகர். இவர் தற்போது மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஆக இருந்து வருகிறார். இவரது மனைவி கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்ஜினியர் வடவள்ளி சந்திரசேகர் திடீர் என அ.தி.மு.க வில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக வடவள்ளி சந்திரசேகர் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையில் கூறி இருப்பதாவது;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அ.தி.மு.க.வில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்து இருக்கிறேன். அ.தி.மு.க கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி இருக்கிறேன். மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே.
தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன். கட்சியில் இருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்து இருக்கிறேன். கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த புரட்சித் தலைவி அம்மா, எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடியார், முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணி புரிந்த கழகத்தின் நிர்வாகிகள், மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்... பிரிய மனமின்றி பிரிகிறேன். என்னை வாழ வைத்த அ.தி.மு.க.வின் அன்பிற்கு என்றும் நான் அடையாளமாக இருப்பேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வடவள்ளி சந்திரசேகர் கூறியிருப்பதாக பரப்பப்படுகிறது..
இதற்கிடையே வடவள்ளி சந்திரசேகர் விலகல் அறிவிப்பு வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு, இரண்டு விதமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கோவையில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.