தமிழகத்தில் அவ்வப்போது சில வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், சில ரவுடிகளை எச்சரிப்பதற்காகவும் பவர் இல்லாத ரவுடிகளை என்கவுண்டர் என்றப் பெயரில் போலீஸார் சுட்டுக்கொள்வது சகஜம். அந்தவகையில், மதுரையை சேர்ந்த ரவுடி ஒருவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்யவிருப்பதாக அவரது குடும்பத்தினர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
மதுரையை சார்ந்த ஜெயக்கொடி என்பவர் என்னுடைய மகன் வெள்ளகாளி என்ற காளிமுத்து மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
அந்தவகையில், ஒரு குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறார். காவல்துறையினர் போலியாக என் மகனை என்கவுண்டர் செய்ய இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சென்றவாரம் சிறையில் செல்போன் பயன்படுத்துவதாக பொய்யான குற்றாச்சாட்டை கூறி என் மகனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். அதேபோல் அடிக்கடி என் மகனை வெளி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.
மேலும், சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது தப்ப முயன்றதாகவும் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததாகவும் வழக்கை முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே, நாங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து நடக்கின்றோம். ஆனால் காவல்துறையினர் சிலர் ஸ்ரீபெரும்புத்தூரில் கிளாய் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வாவை போலியாக என்கவுண்டர் செய்தது போல, என் மகனை போலியாக என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு உள்ளனர். குறிபாக எதிரிகளிடமிருந்து காவல்துறையினர் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு என் மகனை என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
எனவே, என் மகனின் உயிருக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் முழுக்க முழுக்க காவல்துறையும், சிறைக் காவல்துறையும் முழு பொறுப்பு. எனது மகன் உயிரை காப்பாற்ற உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“