கோவை, காரமடை பகுதியில் பிடிபட்ட குட்டி யானைக்கு மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்துவதில் ஆட்சேபனை உள்ளதா என தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் மணக்கரை வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 3 வயது குட்டியானை பிடிபட்டது. வாயில் புண்களுடன் இருந்த அந்த குட்டியானைக்கு சிகிச்சை அளித்து காட்டில் விட்ட போதும் அது ஊருக்குள் திரும்பி வந்தது.
அதை பிடித்த வனத்துறையினர், கோவை ஆனைமலை வனப்பகுதியில் கூண்டுக்குள் அடைத்து, கும்கி யானையாக மாற்றி வருவதாக ஆங்கில பத்திரிக்கையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, அந்த யானையை கும்கி யானையாக மாற்றாமல், மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டு விட உத்தரவிடக் கோரி எல்சா அறக்கட்டளையின் இணை நிறுவனர் பிரேமா வீரராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த குட்டி யானை மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதா என கேரளா, அஸ்ஸாம் மாநில கால்நடை மருத்துவ கல்லூரிகளின் மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் ஏதும் உள்ளதா என தமிழக வனத்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.