பங்களாதேஷ் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்- தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதிகளை அதிகரிக்க முயற்சி.
சைனா பிளஸ் என்ற வாய்ப்பை பயன்படுத்தி ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. சைனா, இந்தியா, வியட்நாம் நாடுகளில் இருந்து பெருமளவில் நூல் மற்றும் துணிகள் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான துணிகளை வாங்கும் முயற்சியாக வங்கதேசத்தின் மிகப்பெரிய வர்த்தக சங்கமான பங்களாதேஷ் கார்மெண்ட் மேனுஃபாக்சரிங் அண்ட் எக்ஸ்போர்ட் அசோசியேஷனில் இருந்து 6 பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடைபெற்றது. ஐடிஎப்(Indian Texpreneurs Federation) அமைப்பு நடத்திய இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 85க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது அதில் முக்கியமாக பருத்தி மற்றும் செயற்கை பஞ்சினால் தயாரிக்கப்படும் துணி வகைகளை தொடர்ச்சியாக வாங்க ஆர்வம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இங்குள்ள ஆலைகள் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்று இருப்பதால் துணிகளின் ஏற்றுமதியை வங்கதேசத்திற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பஞ்சு மற்றும் செயற்கை பஞ்சு கலந்த ரகங்களுக்கு டிமாண்ட் உள்ளதால் நூலின் தேவையும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஏற்றவாறு தொடர்ச்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் சைனாவில் இருந்து வெவ்வேறு துணி வகைகள் தயாரிக்கும் ஐந்து அல்லது ஆறு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒருவரை நியமித்து அங்கேயே தங்கி வைத்து சந்தையை கைப்பற்றுவதைப் போல் இங்கு உள்ள நிறுவனங்களும் கூட்டு முயற்சி எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ரெடி டு கட் என்பது மாதிரியான சாயம் இடப்பட்ட துணி வகைகளுக்கும், நிட்டிங் மற்றும் வீவீங் துணை ரகங்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது இது போன்ற பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன. இம்மாதிரியான சந்திப்புகளின் மூலம் இருநாட்டு நிறுவனங்களுக்குள் நல்ல புரிதலும் தயாரிக்கும் பொருட்கள் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முடிவதாகவும் தமிழகத்தின் துணி உற்பத்தி கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டு வருவதால் தரம் உயர்ந்த துணை ரகங்கள் வங்கதேசத்தின் ஏற்றுமதிக்கு உகந்ததாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வருகின்ற மே மாதத்தில் இங்குள்ள தொழில் முனைவோர் வங்கதேசத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சென்று அவர்களை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ITF மற்றும் SOWTEX அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தன.
செய்தி: பி.ரஹ்மான், கோவை