வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு; கோவை, திருச்சியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கியது போன்று, எந்த பலனும் இல்லாத இந்த வகஃப் திருத்த சட்டத்தை தயவுசெய்து வாபஸ் பெறுங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை

வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கியது போன்று, எந்த பலனும் இல்லாத இந்த வகஃப் திருத்த சட்டத்தை தயவுசெய்து வாபஸ் பெறுங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
muslim protest

வக்ஃப் வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புனர் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இதேபோல், புதிய வக்ஃபு சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி, தென்னூர் ஹை ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிவாசலின் தூணிலும் கருப்பு கொடியை பறக்க விட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்ஃப் வாரிய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பினர் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த பேரணியில் "எச்சரிக்கிறோம் எச்சரிக்கிறோம் வக்ஃபு திருத்த சட்டத்தை எச்சரிக்கிறோம்" "வக்ஃப் வாரிய சட்டத்தை நிராகரிப்போம்", "வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்", "வக்ஃப் வாரிய சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் இருந்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். இதில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். இந்தப் பேரணிக்கு பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறும்போது; கோவை மாவட்டத்தில் அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அனைத்து அரசியல் கட்சியினர் வக்பு திருத்தச் சட்டம் என்ற பெயரில் வக்பு சொத்துக்களை அபகரிக்கும் சட்டத்தை, வந்து சொத்தை அழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தினுடைய இஸ்லாமிய அமைப்பு, மதசார்பற்ற ஜனநாயக கட்சி சார்பிலும், இந்த மாபெரும் கண்டன பேரணியையும், கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்து உள்ளோம். 

இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக, இந்த கூட்டத்தின் வாயிலாக முதலில் தமிழக அரசுக்கு இந்த சட்டத்திற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திலும், மக்களவையிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டு, சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்கின்ற தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் பாராளுமன்றத்திலும், மதசார்பற்ற கட்சிகள் ஒட்டுமொத்தமாக இந்த சட்டத்திற்கு எதிராக இருக்கும் அனைத்து ஜனநாயக கட்சிகளுக்கு கோவை மாவட்ட இஸ்லாமியர்கள் சார்பாக, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த மாபெரும் போராட்டத்தின் வாயிலாக இந்திய பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறோம். அன்பிற்குரிய பாரதப் பிரதமர் அவர்களே, ஏற்கனவே சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., முத்தலாக் திருத்த சட்டம் போன்ற பல்வேறு மத பதட்டத்தை தூண்டக் கூடிய சட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள், அந்த சட்டத்தால் இந்திய தேசத்தில் எந்த விதமான வளர்ச்சியும் வரவில்லை. சி.ஏ.ஏ சட்டத்தால் எந்த இந்துக்களும் முன்னேற்றம் அடையவில்லை. முத்தலாக் சட்டத்தால் எந்த இஸ்லாமியரும் முன்னுக்கு வரவில்லை. வேளாண் சட்டத்தால் எந்த விவசாயிகளும் முன்னுக்கு வரவில்லை. நீங்கள் கொண்டு வருகின்ற சட்டங்கள் எல்லாம் மத பதற்றத்தை தூண்டுகிறதே தவிர, குப்பையில் போடுகின்ற சட்டங்களாக உள்ளது. தயவு செய்து, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வாருங்கள். 

உதாரணமாக இன்றைக்கு அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருள்களுக்கு ஒரு அநியாய வரியை விரித்து உள்ளனர். அந்த அநியாய வரிக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள், ஒட்டுமொத்த இந்துக்கள் சார்பாக ஒட்டுமொத்த கிறிஸ்துவ சார்பாக ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாக எல்லாருமே அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரிப்பார்கள், வரவேற்பார்கள்.

முன்னேற்றத்திற்கான திட்டத்தை கொண்டு வாருங்கள். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 4 கோடி வீடு கட்டுவதாக சொன்னார்கள், இன்றைக்கு இருக்கின்ற முஸ்லிம்கள் வீடுகள் எல்லாம் இடிக்கின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்ற அரசாங்கம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் புல்டோசர் ஓட்டக் கூடிய பயிற்சி அளித்து இஸ்லாமியர்கள் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. ஒரு புறத்தில் 4 கோடி வீடு கட்டி கொடுத்ததாக சொன்னீர்கள், இன்னொரு புறம் முஸ்லிம்களின் வீடுகளை இடித்துக் கொண்டு உள்ளீர்கள். 

பாரதப் பிரதமர் அவர்களே வளர்ச்சிக்கான திட்டத்தை கொண்டு வாருங்கள், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். நீங்கள் கொண்டு வரக் கூடிய சட்டத்தால் இந்த நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என்பதை ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் தெரியப்படுத்துகிறோம். தயவு செய்து வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கியது போன்று, எந்த பலனும் இல்லாத இந்த வகஃப் திருத்த சட்டத்தை தயவுசெய்து வாபஸ் வாங்குமாறு இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம் என்றனர்.

செய்தி: ரஹ்மான் - கோவை, க.சண்முகவடிவேல் - திருச்சி

Trichy kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: