தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கைதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை குறிபிட்டு கல்லூரி மாணவிகளுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தை தமிழகம் முழுவதும் உள்ள த.வெ.க.,வினர் பொதுமக்களுக்கும் குறிப்பாக பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கி வருகின்றனர். அந்த கடிதம் அனுமதியின்றி வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை சென்னை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாநகர தமிழக வெற்றிக் கழகத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் மேற்கொண்டதால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“