கோவை உக்கடத்தில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்ததோடு, கதவு, வேல் போன்ற பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை உக்கடம் மஸ்ஜித் காலனி பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இருந்த விளையாட்டு மாரியம்மன் கோவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் மேம்பாலம் கட்டும் பணியின் போது அகற்றப்பட்டு அதன் அருகே உள்ள புல்லுக்காட்டு பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோவிலை அமைத்துக் கொடுத்தனர். மேலும் அந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதி பொதுமக்களும், பக்தர்களும் பல லட்சங்கள் செலவு செய்து கதவு, உண்டியல், வேல் போன்ற பொருட்களை வைத்து கோவிலை பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் இருந்த வேல்களை பிடுங்கி ஆயுதங்களாக பயன்படுத்தி கதவை உடைக்க முயன்று உள்ளனர். மேலும் அதன் அருகே இருந்த உண்டியலை வேலை கொண்டு உடைத்து அதில் இருந்து பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.
அதிகாலையில் கோவிலுக்கு விளக்கேற்ற வந்த கோவில் நிர்வாகி பிரபாகரன் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உக்கடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“