கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோயிலில் உள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது இந்த மருதமலை திருக்கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தின கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும், 14கிராம் எடையுள்ள 7 பவுன் தாலி,14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூலை கொண்டு வந்து கள ஆய்வுக்கு கொடுத்துள்ளார்.அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அது போலியானது என கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து, அவரிடம் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் நகைகளை திருடி விட்டு போலியானதை உருவாக்கி வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.இதை தொடர்ந்து அறங்காவலர்கள் குழு மற்றும் கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வடவள்ளி போலீசார் கோவில் அர்ச்சகர் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“