கோவை வெதர்மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "புயல் சின்னம் புதுச்சேரியைக் கடந்து கோவைக்கு வருவது போல் உள்ளது. 1977-ஆம் ஆண்டுக்கு பிறகு கொங்கு மண்டலம் வழியாக இந்த புயல் சின்னமானது பயணிக்கப் போகிறது. இதன் மூலம் கொங்கு பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 15 சென்டிமீட்டரில் இருந்து 25 சென்டிமீட்டர் வரை மழையை எதிர்பார்க்கலாம் .
பொதுவாகவே கொங்கு மண்டலத்தின் வழியாக புயல்கள் பயணிக்காது. இது மிகவும் அரிதான நிகழ்வு. நீலகிரி பகுதிகளில் அதீத கன மழை இருக்கும். 30 முதல் 40 சென்டிமீட்டர் வரையிலான மழையை கூட எதிர்பார்க்கலாம். மேலும், நீலகிரியில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். டிசம்பர் 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நீலகிரி செல்வதை தவிர்க்கவும். கோவை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், சென்னை அளவிற்கு வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிக்கு புயல் வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், வானிலை ஆய்வு மையம் எப்பொழுதும் கடலோரப் பகுதிகளுக்கு தான் முதல் எச்சரிக்கை விடுவார்கள் எனவும், கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை இருக்கும் பட்சத்தில் கோவைக்கு வரும் பொழுது சற்று குறைந்து விடும் எனவும் தெரிவித்தார்.
"புவி வெப்பமயமாதல் ஆகியவை இந்த புயலின் வலுவை அதிகரிக்கிறது. மேக வெடிப்பு என்பது தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிகம் நடைபெறும். வடகிழக்கு பருவ மழையை பொருத்தவரை புயலின் சலனங்கள் வைத்து தான் மழைப்பொழிவு இருக்கும். தற்பொழுது உள்ள சூழலைப் பொறுத்தவரை காலையிலிருந்து தொடர்ச்சியாக மழை இருக்கலாம். 48 மணி நேரத்தில் சுமார் 20 சென்டிமீட்டர் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனக் கூறினார்.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“