கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர் சரணிதா லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரணிதா (32) என்ற மனைவியும், 6 வயது மகனும் உள்ளனர். சரணிதா அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. இறுதி ஆண்டு படிப்பை முடித்து உள்ளார். இதைத்தொடர்ந்து சரணிதா சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பயிற்சிக்காக கோவையில் இருந்து சென்னை வந்துள்ள சரணிதா அயனாவரம் பகுதியில் தங்கி பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று மாலை சரணிதாவுக்கு அவரது கணவர் உதயகுமார் தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் சரணிதா போனை எடுக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உதயகுமார் மனைவியுடன் பணிபுரியும் கமலா என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். கமலா அறைக்குச் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் விடுதி நிர்வாகி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், கதவை உடைத்து சரணிதாவின் அறைக்கு உள்ளே சென்று பார்த்தப்போது, சரணிதா கையில் சார்ஜ் கேபிளை பிடித்தவாறே இறந்து கிடப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“