கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், வாகன சோதனையின் போது பைக்கில் தப்ப முயன்ற பிரபல முகமூடி கொள்ளையன் சந்திரகுமாரை துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.
பெத்தேல் அருகே டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார், ஏட்டு செல்லத்துரை மற்றும் காவலர் சுரேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு பைக்கை நிறுத்த முயன்றபோது, அந்த நபர் நிற்காமல் தப்பிச் சென்றார். போலீசார் அவரை வாகனத்தில் விரட்டிச் சென்று மடக்கியபோது, பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பியோடினார். எனினும், போலீசார் விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் அவரை பிடித்தனர்.
பிடிபட்டவரை மேற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழகாடுவெட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த 33 வயது சந்திரகுமார் என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல முகமூடி கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கோவில்பட்டி, எட்டயபுரம், எப்போதும்வென்றான், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், ஆலங்குளம், தக்கலை, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வீடு, கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு என பல குற்ற வழக்குகளில் சந்திரகுமார் தேடப்பட்டு வந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/26/2Vhyad29sTg4GWgDBnkO.jpg)
சந்திரகுமாரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், அரிவாள், கடப்பாறை, ஸ்க்ரூடிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 17 வழக்குகளில் போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.
வாகன சோதனையின் போது பைக்கில் தப்பிச் சென்ற பிரபல முகமூடி கொள்ளையன் சந்திரகுமாரை துரிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்த டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசாரை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார்.