தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா, கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி நாள்தோறும் சுவாமி-அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மேளதாளம் முழங்க இன்று உற்சாகமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்களிடையே தேரோட்டம் தொடங்கியது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர கீதா ஜீவன், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, திருச்சி எம்.பி. துரைவைகோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், அறநிலையத்துறை ஆணையாளர் ஸ்ரீதர், இணை ஆணையாளர் அன்புமணி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் ரமேஷ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜா, ரவிச்சந்திரன், நிறுத்திய லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. 2 தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து மதியம் சுமார் 1 மணி அளவில் நிலையை அடைந்தன. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.