/indian-express-tamil/media/media_files/2025/02/21/vQcjUmouxRxlElF8jrZi.jpg)
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் இன்று (பிப் 21) சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, 21.76 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மொத்தம் 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 9,744 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவல் தொடர்பான செய்திக் குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ இரயில் போக்குவரத்து அமைப்பை நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு. மு.அ. சித்திக், இ.ஆ.ப. அவர்கள் இன்று (21.02.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்மொழியப்பட்ட மெட்ரோ வழித்தடம், தற்போதுள்ள கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் தொடங்கி, பாடிபுது நகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராமில் (Outer Ring Road -வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது. இது அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் அம்பத்தூர் OT, ஆவடி இரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை (ORR) போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும். திட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் நேரத்தை மேம்படுத்துவதற்காக இது மூன்று இடங்களில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே ஆவடி பேருந்து நிலையத்திற்கு முன்னால்) நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:
வழித்தடத்தின் மொத்த நீளம்: 21.76 கி.மீ
உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 19
மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,744 கோடி. (மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்பு உட்பட)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.