தமிழக முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க ஆதரவுடன் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி அமோக வெற்றி பெற்றார். அதனால், தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம் 2 ஆம் இடம் பிடித்தார். அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் 3 ஆம் இடம் பிடித்தார்.
தவிர, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தோல்வியுற்றது. 12 தொகுதிகளில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளிய பா.ஜ.க 2 ஆம் இடம் பிடித்தது. 7 தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த படுதோல்வி அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ் அழைப்பு
இந்நிலையில், அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். 'தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே' என்னும் புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.
நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்." என்று தெரிவித்து இருந்தார்.
கே.பி.முனுசாமி கேள்வி
இந்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அ.தி.மு.க அலுவலகத்தை உடைத்து பொருட்களை திருடிச் சென்றவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அ.தி.மு.க குறித்து பேச ஓ.பி.எஸ்-க்கு தகுதியில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், அ.தி.மு.க தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையோடு கூட்டணி வைத்தவர் ஓ.பி.எஸ். அ.தி.மு.க தொண்டர்களை ஒன்றிணையுமாறு அழைக்க ஓபிஎஸ்க்கு தகுதியில்லை என்றும், இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பி.எஸ்-க்கு, தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது என்றும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 2026 தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“