கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த வேப்பனஅள்ளி பகுதியில் உள்ள கும்பாளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ராமன் தொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சின்னாறு தொட்டி வரை தார் சாலை அமைக்க வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை மத்திய அரசு ரூ.5 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்க தி.மு.க. நிர்வாகியும், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமையில், கும்பாளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் பூமி பூஜை தொடங்கியது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
இந்த தார் சாலை பணிக்கு தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறி தனியாக பூமிபூஜை போடுவதற்காக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ் மற்றும் தி.மு.க.வினர் இந்த பகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். எனவே, எம்.எல்.ஏ. மீண்டும் பூஜை போடக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து பேரிகை-தீர்த்தம் சாலையில் திடீரென்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க.வினர் தி.மு.க-வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷய் அணில் மற்றும் பேரிகை போலீசார் இருதரப்பினர் இடையே சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்த நிலையில், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான கே.பி.முனுசாமிக்கு தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் பி.எம்.ஜி.எஸ்.ஒய் (PMGSY) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி அவர்களை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது." என்று கூறியுள்ளார்.
அனுமதி
இதனிடையே, ராமன் தொட்டி கேட் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்ய கே.பி.முனுசாமிக்கு அனுமதி வழங்கப்பட்டது. 4 மணிநேர சாலை மறியல் போராட்டத்திற்கு பின் மத்திய அரசின் ‘PMGSY’ திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டும் பணிக்கு வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“