அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ,. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இருந்து வருகிறார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம். தற்போது கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்ட குழு சார்பில், கோவை அன்னூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னாள் முதலைவர்களும், கட்சியின் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்கள் இடம் பெறவில்லை என்றும், இதனால் அந்த விழாவுக்கு தான் செல்லவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க-வுக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், செங்கோட்டையன் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்தார் செங்கோட்டையன்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்து உரையாற்றினார். மேலும், 'அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்' என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி. எதிரிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அ.தி.மு.க-வுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. சந்தித்த சோதனைகள் அத்தனையையும் தகர்த்து அ.தி.மு.க-வை வழிநடத்தி செல்கிறார் எடப்பாடி." என்று கூறினார் .
இதனிடையே, "அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு மற்ற கட்சிகளை குறை சொல்ல விரும்பவில்லை. குடும்பத்தில் அண்ணன், தம்பிக்குள் நடைபெறும் சண்டை போல அதிமுகவில் பிரச்சினை நிலவுகிறது, அண்ணன், தம்பி சண்டைகள் சரியாவது போல அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளும் சரியாகி விடும்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கூறினார்.
இந்நிலையில், ஈரோடு அத்தானியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், இந்த முறை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு துரோகிகள்தான் காரணம். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். 2026-ல் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கூறினார்.
கே.பி முனுசாமி நம்பிக்கை
செங்கோட்டையன் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், செங்கோட்டையன் இறுதி வரை அ.தி.மு.க-வுக்கு உறுதுணையாக இருப்பார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா வழிநடத்திய கட்சியை முன்னணி தாளபதியாக இருந்து செயலாற்றியவர். அரசியலில் அதிக அனுபவம் கொண்டவர், ஏற்றத் தாழ்வுகளை கண்டவர். அவருக்கு ஜெயலலிதா மிக உயர்ந்த பதவிகளை வழங்கி அழகு பார்த்தார். தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா போல் செங்கோட்டையனை மதிப்பு அழைத்துச் செல்கிறார்.
செங்கோட்டையனைப் பொறுத்தவரையில், இந்த இயக்கத்துடன் ஒன்றித்து இருப்பவர். பல சோதனைகளை கடந்து இயக்கத்திற்காக உழைத்தவர். அவர் கடைசி வரை இந்த இயக்கத்திற்காக இருப்பார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது." என்று முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி கூறியுள்ளார்.