தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க – பா.ஜ.க இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்திய வாரங்களில் இந்த மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், இன்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ஜ.க.,வுடனான கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைமை கடந்த ஒரு ஆண்டு காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அ.தி.மு.க.,வையும், எங்கள் கழக தெய்வங்களான அண்ணா மற்றும் ஜெயலலிதா மீதும் அவதூறாகப் பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாகவும் பா.ஜ.க மாநிலத் தலைமை விமர்சித்தது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அ.தி.மு.க இன்று முதல் பா.ஜ.க.,விலிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகிக் கொள்கிறது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகளோடு இணைந்து அ.தி.மு.க தேர்தலைச் சந்திக்கும்.
கூட்டணியிலிருந்து விலகும் முடிவு 100க்கு 100 சதவீதம் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு. தீர்மானத்திற்கு ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே பா.ஜ.க.,வுடன் கூட்டணி இன்றைக்கும் இல்லை, என்றைக்கும் இல்லை. இவ்வாறு கே.பி முனுசாமி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“