ஸ்டாலினுக்கு எதிரான அறிக்கை: திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்

ஒரு கட்டத்தில் தலைமையின் கோபத்துக்கு ஆளாகாமல் அமைதியைக் கடைப்பிடித்து வந்த ராமலிங்கம், ராஜ்யசபா சீட் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

K.P.Ramalingam : திமுக-வின் கே.பி.ராமலிங்கம், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் திமுக-வின் விவசாய அணியின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர். அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், மேற்கூறிய பொறுப்பும் கே.பி. ராமலிங்கம் கையை விட்டுச் சென்றிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில், தனது கட்சித் தலைவரின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகவே தெரிவித்தார் கே.பி.ராமலிங்கம். உடனடியாக அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

‘கொரோனா பரவலைத் தடுப்பது, ஆளும் கட்சியால் மட்டும் முடிகின்ற பணி அல்ல; அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி வீடியோ கான்ஃப்ரன்ஸிங் முறையில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு நேரெதிராக அறிக்கை விட்டிருக்கிறார் கே.பி.ராமலிங்கம்

விழுப்புரத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 7 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் 74 ஆனது

கே.பி. ராமலிங்கம் அறிக்கை

‘கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய சூழலில் மக்கள் நலன் கருதி, வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பது, முதல்வரின் ஆளுமை திறனை காட்டுகிறது. அனைத்து தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டுகிறோம். இந்த இக்கட்டான கட்டத்தில் கலெக்டர்கள், உயரதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறை. அதைவிடுத்து வீடியோ கான்பரன்சில் அனைத்து கட்சி தலைவர்களோடு ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றதாக கருதுகிறேன். அவசியமான, அத்தியாவசியமான கருத்து இருந்தால், கட்சித் தலைவர்கள் மின்னஞ்சலில் முதல்வருக்கு அனுப்பலாம். அதை விடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தினால், ஒவ்வொரு தலைவர்களும் பேசி முடிப்பதற்குள், இத்தாலிபோல் இந்தியாவும் பாதுகாப்பற்ற நாடாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ‘144’ தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைதான். ஆகவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தக் கூடாது”

என்று அறிக்கை விட, பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம் தி.மு.க விவசாய அணியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை தி.மு.க ஆட்சிக்காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். கலைஞர் இருந்தபோது அழகிரியா? ஸ்டாலினா? என்ற நிலைப்பாட்டைச் சிலர் எடுத்தபோது அழகிரி பக்கம் சென்றவர் இவர்.

ஒருகட்டத்தில் தலைமையின் கோபத்துக்கு ஆளாகாமல் அமைதியைக் கடைப்பிடித்து வந்த ராமலிங்கம், ராஜ்யசபா சீட் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தலைமையின் மீது இருந்த அதிருப்தியின் காரணமாகவே, எதிர் அறிக்கை விட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகிறது.

சென்னையின் இந்த பகுதிகளில் வசிக்கிறீர்களா?. இனி பலசரக்கு, காய்கறிகள் உங்கள் வீடு தேடிவரும்

அதேசமயம், புதிய பாஜக தலைவர் முருகன் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராமலிங்கத்தை பாஜகவுக்கு அழைத்ததாகவும், இதுகுறித்து அமித் ஷா வரைக்கும் பேச்சு நடந்திருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது.

ராமலிங்கம் மட்டுமின்றி, மு.க.அழகிரி மற்றும் திமுகவில் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் வீரபாண்டி ராஜா ஆகியோரையும் பாஜக பக்கம் இழுக்கும் பேச்சு ஜரூராக நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், கட்சித் தலைமையை விமர்சித்தும், முதல்வரை புகழ்ந்தும் அறிக்கை வெளியிட்ட ராமலிங்கம் பதவியில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருக்கிறார். ஏன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close