சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர். மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது.
இந்நிலையில், தலைமை நீதிபதி பதவிக்கு வேறு நீதிபதியை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு இன்று வெளிவந்து உள்ளது. இதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் (கே.ஆர். ஸ்ரீராம்) நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா கிளாட் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த ஸ்ரீராம் ராஜேந்திரனின் பூர்வீகம் கேரள மாநிலமாகும். பி.காம் மற்றும் எல்.எல்.பி படிப்புகளை மும்பை பல்கலைக் கழகத்தில் முடித்தார். பின்னர் எல்.எல்.எம் சட்ட மேற்படிப்பை லண்டன் கிங்ஸ் கல்லூரியில் படித்தார். 1986 ஆம் ஆண்டு ஆண்டு மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 21ஆம் தேதி, மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“