கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ராணுவ வீரர் ஆவார். பிரபுவின் குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தி.முக. பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமிக்கும் இடையே பல ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. கைகலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் படுகாயமடைந்த பிரபு சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மோதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தனர். கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில், ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, அண்ணாமலை ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து புகார் மனு அளித்தார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் சென்று புகார் அளித்தார். சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் தங்கள் உள்ளக் குமுறல்களை ஆளுநரிடம் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வரின் பணி நம்பிக்கை அளிக்கும்படியாக இல்லை. தடா பெரியசாமியின் காரை விசிகவினர் சேதப்படுத்தியதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். அதை கவனிப்பதாக ஆளுநர் பதிலளித்தார்” என்று அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இது தொடர்பாக புகார் அளிக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/