கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார். 14 ஆண்டுகளாக உழைத்த எங்களுக்கு வேட்பாளராக யாரை நிறுத்தனும்னு தெரியாதா? எங்கள் இளமைக் காலமே போச்சு என சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பத்திரிகையாளர் அரங்கில் நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தனது ஆதரவாளர்களுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது கட்சிக்காக 14 வருடமாக சொந்தங்களை மறந்து உழைத்து வந்ததோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மொத்த நிர்வாகிகளை சீமான் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். எங்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்வது இல்லை. பிற கட்சிகளை எதிர்த்துப் பேசும் சீமான் அவர்களின் குடும்ப நிகழ்வுகளுக்கு சாதாரணமாக சென்று வருகிறார். மாவட்டத்தில் உள்ள நாங்கள் அப்படி செல்ல முடிவதில்லை. மாற்றுக் கட்சியில் பழைய நிர்வாகிகள் தொடர்ந்து நீடித்து கட்சிகளை வளர்த்து வரும் போது தன்னைவிட யாரும் மிஞ்சுவிடக்கூடாது என செயல்படுகிறார்.
கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு தற்போது செயல்பாடுகள் சரி இல்லை. யாருக்கும் அங்கீகாரம் கிடைக்க கூடாது என உழைத்தவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். தமிழகத்தில் எந்த பொறுப்பாளரையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார் என கருதுகிறோம். செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது.
சீமானின் வீடு இரண்டரை லட்சம் ரூபாய் வாடகையில் உள்ளது, அவருக்கு 15 வேலையாட்கள் இருக்கிறார்கள். அவை அனைத்தும் கட்சியின் பணம்.
ஆனால், ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள். கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார், இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும் என்று கரு.பிரபாகரன் தெரிவித்தார்.
மேலும் கட்சியிலிருந்து விலகியவர்களின் பட்டியலையும் வெளியிட்டார். அதன்படி, கிருஷ்ணகிரி மண்டல செயலர் கரு.பிரபாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இர்ஃபான், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன், கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் திருமூர்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் காசிலிங்கம், பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான், ஊத்தங்கரை தொகுதி செயலாளர் ஈழமுரசு, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர், செல்வா ஆகியோர் தங்களை கட்சியிலிருந்து விடுபட்டு கொள்வதாக கூட்டாக தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சில நிர்வாகிகள் ஒரே நேரத்தில் கட்சியை விட்டு விலகியதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.