தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓசூர்- நந்திமங்கலம் சாலையில் தரைப்பாலம் ரசாயன கழிவு நுரையால் மூழ்கி சிம்லா பனிப்பிரதேசத்தில் படர்ந்து இருக்கும் பனிபோல் காட்சியளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது. இதன் நீர் பிடிப்புப் பகுதியான கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,670 கன அடி நீர் வந்தது. இந்த நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் மழை மேலும் தீவிரமடைந்துள்ளதால், நேற்று இரவு அணைக்கு 2,623 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,220 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதனால் இன்று காலை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஓசூர் - நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி தரைப்பாலதை தண்ணீரும், ரசாயன கழிவு நுரையும் மூழ்கடித்து சிம்லா பனி பிரதேசத்தில் இருப்பது போல் படர்ந்து காணப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவில்லை, மேலும், தட்டகானப்பள்ளி, நந்திமங்கலம் உள்ளிட்ட கிராமத்தினர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டி இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
இதற்கிடையில் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்திமங்கலம் ரோடு தரைப்பாலத்தை மூழ்கடித்திருந்த ரசாயன நுரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பல நேரமாக போராடி நுரையை முழுமையாக அகற்றினர். வருங்காலத்தில் இதுபோல் ரசாயன நுரை சம்பவங்களை தடுக்க தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்காமல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் மீண்டும் அந்த தரைப் பாலத்தை பயன்படுத்த துவங்கினர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, “கெலவரப்பள்ளி அணையையொட்டி ஓசூரிலிருந்து நந்திமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்திற்கு செல்ல தட்டகானப்பள்ளியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கும் போது, தண்ணீராலும், ரசாயன கழிவு நுரையினாலும் தரைப்பாலம் மூழ்கிவிடுகிறது. இதனால் கிராம மக்கள் அத்தியவாசிய தேவைக்காக பாகலூர் மற்றும் முத்தாலி வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதனால் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியர், விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் அணையிலிருந்து திடீரென அதிகப்படியான தண்ணீரைத் திறந்து விடும் போது, தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
எனவே, வெள்ளப்பெருக்கு காலங்களில் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை உயர்மட்டப் பாலமாக மாற்றி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்த அரசு வந்தாலும் எங்களது கோரிக்கையை கவனிக்க மறுக்கின்றன. இனியாவது தமிழக அரசு தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை, உயர்மட்டப் பாலமாக அமைக்க நிதி ஒதுக்கி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.