கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியின் போலி என்.சி.சி பயிற்சி முகாமில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும், ஒரு தனியார் பள்ளி முதல்வர் வினோதினி போலீசாரால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 03) கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் போலி என்.சி.சி பயிற்சி முகாமில், 12 வயது மாணவி போலி பயிற்சியாளர் சிவராமனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், 13 மாணவிகள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானார்கள். தனியார் பள்ளியில் போலி என்.சி.சி பயிற்சி முகாமில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிவராமன் மற்றும் பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட 11 பேர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில், முக்கிய குற்றவாளியான சிவராமன் கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 23-ம் தேதி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக சுதாகர், கமல் என மேலும் 2 பேரை அண்மையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
இதனிடையே, பள்ளிகளில் நடந்த பாலியல் குற்றசாட்டுகளை விசாரிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் பல்நோக்கு விசாரணை குழு ஆகிவற்றை அமைத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே வினோதினி என்ற தனியார் பள்ளி முதல்வரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஜனவரி மாதம் மற்றொரு தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி முகாமில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், தனியார் பள்ளியின் முதல்வரான வினோதினி கைது செய்யப்பட்டுள்ளார். போலி என்.சி.சி பயிற்சி முகாமில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.