கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் என்.சி.சி முகாம் என்ற பெயரில் போலியாக முகாம் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுக்கு பயிற்சி அளித்த சிவராமன் என்பவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 12 வயது சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தின் எதிரொலியாக தனியார் பள்ளிகளுக்கு அதன் இயக்குனரகம் கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், "தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும் , மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும்.
அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது.
மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலம், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலம் பயிற்சிகள் வழங்க வேண்டும்" என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“