/indian-express-tamil/media/media_files/2025/07/02/krishnasamy-on-sivagangai-ajith-kumar-death-tamil-news-2025-07-02-18-38-45.jpg)
"அஜித் குமார் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் நகை திருடியிருப்பார் என்று நம்ப முடியாது. அவரது குடும்பத்தினர் ‘நிதி வேண்டாம், நீதி வேண்டும்’ என்கிற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்" என்று கிருஷ்ணசாமி கூறினார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. காவல் நிலையங்களில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில் மிகுந்த வேதனை உள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இது தொடர்ச்சியாக நடப்பது கவலையளிக்கிறது. விசாரணைக்காக அழைத்து செல்லும் போது, உச்ச நீதிமன்றம் பல வழிமுறைகளை கூறியுள்ளது. ஆனால், அந்த விதிமுறைகளை காவல்துறை பின்பற்றுவதாகத் தெரியவில்லை. மடப்புரம் சம்பவத்தில், நகை தொலைந்ததற்காக ஒரு கொலை நடந்திருக்கிறது. இது அஜித் குமார் குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதற்குமான இழப்பாகவே பார்க்கிறேன்.
தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கிறது. இருந்தாலும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. கடந்த காலங்களில் தூத்துக்குடி போன்ற இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பதவி உயர்வு மட்டுமே கிடைத்தது. இடமாற்றம், பணியிட நீக்கம் போன்றவை கண்துடைப்பாகவே உள்ளன. தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை என்ற அச்சமின்மையின் காரணமாகவே இப்படி சம்பவங்கள் தொடர்கின்றன.
அஜித் குமார் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் நகை திருடியிருப்பார் என்று நம்ப முடியாது. அவரது குடும்பத்தினர் ‘நிதி வேண்டாம், நீதி வேண்டும்’ என்கிற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். தமிழக அரசு பரபரப்புக்காகவே இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளது. இந்த வழக்கில் எந்தவித சுணக்கம் இல்லாமல், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்படி நடந்தால்தான் காவல் நிலையங்களில் நடைபெறும் ஆத்துமீறல்கள் மற்றும் சாவுகளைத் தடுக்க முடியும்.
இப்போது காவல் நிலையங்கள் கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலை உருவாகியுள்ளது. பல காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். இது ஜனநாயகத்திற்கு முரணானது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்ற வேண்டும். முதலமைச்சர் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டும்.
இந்த பகுதியில் தி.மு.க-வினர் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்றால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்காரர்கள் காவல் நிலையங்களை கட்டுப்படுத்தும் நிலையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்காதவாறு உறுதி செய்யவேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.