நீட் தேர்வு எழுத மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி நேற்று மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். மகனின் தேர்வு மையத்தைத் தேடி அலைந்த நிலையில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் எர்ணாகுளத்தில் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் நிறுவனர் மாணவனைத் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவர் அசைவற்று இருந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிருஷ்ணசாமி மாரடைப்பால் பலியானது தெரிய வந்தது.
கிருஷ்ணசாமியின் மரணம் அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எர்ணாகுளம் வந்தடைந்த உறவினர்கள் அவரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யாமல் தருமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று கிருஷ்ணசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் சொந்த ஊரான திரித்துறைப்பூண்டிக்கு புறப்பட்டது.
திருவாரூர் திரித்துறைப்பூண்டியில் உள்ள கிருஷ்ணசாமியின் சொந்த ஊரான விளாக்குடியில் அவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் கதறி அழுதனர். அவரின் மைத்துனர் வெளிநாட்டில் இருந்து வர இன்று இரவு ஆகும் என்பதால், அவரின் இறுதிச் சடங்கு நாளைக் காலை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணசாமியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.