காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு; கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
இது குறித்து சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அங்கு நடைபெற்ற வந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். எனினும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ரூ.15,000 பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை செல்வதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவருடன் வந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், மாநகரத் தலைவர் மிர்சாவூதீன், மாநிலத் துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வி.தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்திக்கு நீதிமன்றத்தில் தண்டனை விதித்துள்ளதை அறிந்ததும், அந்த தீர்ப்பைக் கண்டித்து முன்னறிவிப்பின்றி, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து கண்டன முழக்கமிட்டனர்.
இதனையறிந்த ரயில்வே போலீஸார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில், ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், அதே ரயிலில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னைக்கு சென்றார். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil