ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை துரோகி என்று குற்றம்சாட்டிய நிலையில், தன் மீது துரோகி பட்டம் சுமத்தியதற்கு பதில் கொஞ்சம் விஷம் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்று மல்லை சத்யா தனது குமுறலை வெளிப்படுத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், வைகோ தன்னுடைய மகனுக்காக தன் மீது துரோகிப் பட்டம் சுமத்துகிறார், இது வைகோ போன்ற தலைவருக்கு அழகல்ல, இது போல, எந்தவொரு நிர்வாகி மீதும், தொண்டர்கள் துரோகி என்று பழி சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் என்று மல்லை சத்யா உருக்கமாகக் கூறியிருந்தார்.
ம.தி.மு.க-வை அழிக்கப் பார்க்கிறார்கள், சதி செய்கிறார்கள். விடுதலைப் புலிகள் தலை பிரபாகரனுக்கு புலிப்படை வீரன் மாத்தையா செய்த துரோகத்தைப் போல, மல்லை சத்யா துரோகம் செய்கிறார் என்று வைகோவின் குற்றச்சாட்டுக்கு மல்லை சத்யா தெரிவித்துள்ள மறுப்பு
ம.தி.மு.க-வில் புயலாக வீசி வருகிறது.
இந்நிலையில், ம.தி.மு.க தொடங்கப்படும்போது உடன் இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் BWTamil 360 என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வைகோ அவருடைய மகன் துரை வைகோவுக்கு பயப்படுகிறாரோ என்று தான் கருதுவதாக கூறியுள்ளார்.
வைகோ தி.மு.க-வில் இருந்து நீக்கியபோது, அவரைத் தாங்கி நின்று, உடன் இருந்த தலைவர்கள் பலரையும் வைகோ வெளியே அனுப்பினுள்ளார் என்றும், மல்லை சத்யா 1996-98 வாக்கில் கட்சிக்குள் வந்தார், அவருடைய பெயரை மதுராந்தகம் தொகுதிக்கு தான்தான் கூறியதாகவும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பொன் முத்துராமலிங்கம், மதுராந்தகம் ஆறுமுகம், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், நான் என பலரையும் வெளியே அனுப்பியுள்ளார். அதனால், வைகோ பிரபாகரனும் இல்லை, மல்லை சத்யா மாத்தையாவும் இல்லை என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகம் அலுவலகம் உள்ள இடத்தை, நான் மதுராந்தகம் ஆறுமுகம், கண்ணப்பன் ஆகியோர் அலைந்து திரிந்து வாங்கினோம் என்றும் அந்த இடம் வை. கோபால்சாமி, ம.தி.மு.க பொதுச் செயலாளர், அண்ணாநகர் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் உள்ள சொத்துகள் எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. அது மட்டுமல்ல, எழும்பூரில் உள்ள தாயகம் அலுவலகம், திருச்சி, கோவை, ஈரோடு, மதுராந்தகம் ஆகிய இடங்களில் உள்ள ம.தி.மு.க அலுவலகங்களின் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ம.தி.மு.க-வின் சொத்துகள் எல்லாம் இனி குடும்பச் சொத்துகள் என்றும் வைகோ தன்னுடைய மகனுக்கு பயப்படுவதாகவும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், 2001 வரை வைகோவுடன் இருந்ததாகவும் அதற்கு பிறகு விலகி விட்டதாகவும் கூறியுள்ளார்.