scorecardresearch

சேது கால்வாயை கிடப்பில் போட்டதில் டி.ஆர் பாலு அங்கம் வகித்த மத்திய அரசுக்கும் பங்கு உண்டு: கே.எஸ் ராதாகிருஷ்ணன்

இதை டி.ஆர்.பாலுவுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கு நினைவூட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

சேது கால்வாயை கிடப்பில் போட்டதில் டி.ஆர் பாலு அங்கம் வகித்த மத்திய அரசுக்கும் பங்கு உண்டு: கே.எஸ் ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் அன்று டி.ஆர்.பாலு அமைச்சர். சேது சமுத்திர திட்டம் என்ன என்று 2004-க்கு முன்பு டி.ஆர்.பாலு அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சேதுகால்வாய் திட்டம் 160 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்படுகிறது. 1970 – களின் இறுதியில் இருந்து, இது குறித்தான ஆய்வுப் பணிகளில் அண்ணன் நெடுமாறனுடன் நான் ஈடுபட்டவன்.
அன்றையிலிருந்து தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தினமணி போன்ற இதழ்களில் சேது கால்வாய் திட்டம் குறித்தான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவன்.

7.12.1988 அன்று தினமணியில் இது தொடர்பாக விரிவான வரைபடத்தோடு கட்டுரை எழுதியவன். சேதுகால்வாய் திட்டம் குறித்தான நூலை அப்போதே எழுதினேன்.
அது தமிழகத்தின் பாராட்டைப் பெற்றது. 
திருச்செந்தூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது டி.டி.கிருஷ்ணமாச்சாரி, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், கே.டி.கோசல்ராம், என்.ஜி.ரங்கா, கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தூத்துக்குடி எஸ்.ஏ.முருகானந்தம் என போன்ற பலர் 1960 – களில் சேது சமுத்திரத் திட்டத்துக்காக  வாதிட்டுப் பேசியவர்கள். 

அண்ணா முதலமைச்சராக இருக்கும்போது சேதுக் கால்வாய் திட்டம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், சேலம் இரும்பாலை போன்ற திட்டங்களை நிறைவேற்றும் வகையில் எழுச்சி நாள் அறிவித்தார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? 
செப்டம்பர் 15, 1998 இல் அண்ணா பிறந்தநாளையொட்டி  மதிமுக சார்பில் பேரணி நடைபெறும் என்று வைகோ அறிவித்தார். அந்த மறுமலர்ச்சிப் பேரணியை முழுமையாகப் பொறுப்பேற்று நான் நடத்தினேன்.

அந்தப் பேரணிக்கு வருகை தந்திருந்த  வாஜ்பாயை வரவேற்க விமான நிலையத்துக்கு வைகோ  சென்ற போது;முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் வாஜ்பாயை வரவேற்க வந்திருந்தார். வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மதிமுக உதயமான பின் முதன்முதலாக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அப்போதுதான் சந்தித்தார்.

அருகே இருந்த என்னிடம் கலைஞர் கருணாநிதி, “உன்னுடைய சேதுகால்வாய்திட்ட கட்டுரையைப் படித்தேன்யா” என்று  15-9-1998 இல் சொன்னதும் நினைவுக்கு வந்தது. 
அப்போது சேதுகால்வாய் திட்டம் தொடர்பாக வைகோ, பிரதமர் வாஜ்பாயிடம் கொடுக்கவிருந்த மனு என்னிடம் இருந்தது. 
அப்போது, வைகோ வாஜ்பாயிடம் ஆங்கிலத்தில், “அடல்ஜி, சேது சமுத்திர கெனால் புராஜெக்ட் என்று மறுமலர்ச்சி கடற்கரை நிகழ்வில் தெளிவாகச் சொல்லுங்கள்” என்றார்.

அதற்கு பிரதமர், “ஐ நோ சேதுகால்வாய் புராஜெக்ட்  மிஸ்டர் வைகோ. ஐ வில் அனவ்ன்ஸ் ”என்றார்.  2001 – இல் திமுக – மதிமுக கூட்டு முறிந்தது. அதன் பின் நான் திமுகவில் இணைந்தேன்.
சேதுகால்வாய் திட்டம் தொடர்பான கடிதத்தை அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்ப வேண்டும் என்று கலைஞர் அவர்களிடம் நான் வேண்டிக் கொண்டேன். நான் தயாரித்த ஆங்கிலக் கடிதத்தை (8.5.2002 என்று நினைவு)பிரதமர் வாஜ்பாய்க்கு முதன்முதலாக அனுப்பி வைத்தார்.

இன்றைக்கும் அந்த கடிதத்தில் என் கைபட எழுதப்பட்ட தேதி இருக்கும். இதைவிட சாட்சியாக வேறு ஒன்றும் சொல்ல முடியாது. நான் எழுதிய புத்தகத்தைக் கொண்டு தொடர்ந்து முரசொலியில் கலைஞர் எழுதிய  கட்டுரைகளும் வந்தன. 
2004-க்கு பிறகு டி.ஆர்.பாலுவுக்கு மன்மோகன்சிங் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. கலைஞருடைய கடுமையான வினையின் அடிப்படையில் இன்னின்ன துறை வேண்டும் என்று கேட்கப்பட்டதால்தான் பாலுவுக்கு அது கிடைத்தது.

இன்றைக்கு முரசொலி மாறன் இல்லை. டி.ஆர்.பாலு தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, சேது சமுத்திர திட்ட அடிக்கல் நாட்டுவிழா மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அருகே நடந்தது. 
பிரதமர் மன்மோகன்சிங்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, கலைஞர் என பல கட்சித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். வைகோ அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதும் உண்டு. சேது சமுத்திரத் திட்டத்தில் அவருடைய பங்கை யாரும் மறுத்துவிட முடியாது. அன்றைக்கு இருந்த வைகோ வேறு; இன்றைக்குள்ள வைகோ வேறு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
இப்படியாக  சேது சமுத்திர அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடந்தாலும், பாரதி கண்ட கனவு நனவாகிவிட்டது என்று எல்லாரும் நினைத்தாலும், சேது சமுத்திர திட்டம் எதிராக ராமர் பாலம் என கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடுத்தார்.

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தைத் தகர்க்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில்  சுப்பிரமணிய சுவாமி  தொடுத்த வழக்கில், அன்றைய காங்கிரஸ் அரசு முதலில் ஆதரித்துவிட்டு, பிறகு அந்தத் திட்டத்தை சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவாக கிடப்பில் போட்டது.
அம்பிகா சோனி அன்றைய இத் துறை அமைச்சர்.  அதை இல்லையென்று டி.ஆர். பாலு மறுப்பாரா? காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் அன்று டி.ஆர்.பாலு அமைச்சர். சேது சமுத்திர திட்டம் என்ன என்று 2004-க்கு முன்பு டி.ஆர்.பாலு அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அமைச்சர் ஆன பிறகு,  அந்த திட்டத்தை கிடப்பில் போடக்  கூடாது என்று கேபினெட் கூட்டத்திலாவது, பிரதமர் மன்மோகன்சிங்கிடமாவது, சோனியா  காந்தியிடமாவது கடுமையாக பாலு வாதாடினாரா என்பதையெல்லாம் அறிந்து கொள்வது தமிழக மக்களின் பொறுப்பாகும். 
சேது சமுத்திர  திட்டம் வரவிடாமல் தடுத்ததில் முக்கியமான பங்கு சாட்சாத் சுப்பிரமணிய சுவாமிக்குத்தான் உண்டு. அவரும் அரசியல் களத்தில் நியாயகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்.

சேதுகால்வாய்திட்டம்நிறைவேற்றப்படவில்லை நடைமுறைக்கும் வரவில்லை. மக்கள் வரிப் பணத்தில் பாக். ஜலசந்தி அருகே வங்கக் கடலில் உள்ள மண்ணை அள்ளிப் போட்டார்கள்.
அவ்வளவுதான். ஒரு 6 – 7 மாதங்கள் இந்தப் பணி நடந்தது. இதனால் சில கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்களும், கம்பெனிகளும், வளர்ந்தார்கள். சில பெரிய மனிதர்களும் வளர்ந்தார்கள். அவ்வளவுதான். 160 -170 வருட கனவு சிலரையும், சில அரசியல் வியாபாரிகளையும் சேது சமுத்திரம் என்ற பெயரில் வாழ வைத்தது.

அதை வைத்து அவர்கள் சம்பாதித்து, மக்கள் வரிப் பணத்தில் கொழுத்ததுதான் நடந்தது. அவர்கள் கடலில் மண்ணை அள்ளிப் போட்டார்கள். 
சேதுவை மேடுறுத்தி சாலை  படைக்கவில்லை. இதை டி.ஆர்.பாலுவுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கு நினைவூட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

தகவல் கே.எஸ் ராதாகிருஷ்ணன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ks radhakrishnan said that d r balu also had a role in the sethu samudra project being shelved