Ku.Pa.Krishnan silence raise many questions in Trichy ADMK cadres: அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் அதிரடி சரவெடிகளாக வெடிக்கத் துவங்கியதில் இருந்தே ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் இருவரும் தத்தம் ஆதரவாளர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவதும், பழைய நிர்வாகிகளை நீக்குவதும் என பட்டியல் நீண்டுக் கொண்டேயிருக்கின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.,வில் வெகு நீண்டகாலமாக பொறுப்பில் இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான திருச்சியை சேர்ந்த கு.ப.கிருஷ்ணனை அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இ.பி.எஸ் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க போராட்ட மேடையில் இ.பி.எஸ் திடீர் மயக்கம்
ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை அதிரடியாக கட்டம் கட்டி வரும் இ.பி.எஸ், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் அவர் ஓ.பி.எஸ் ஆதரவாளர் என்பதை விட வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.
ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோது, எம்.ஜி.ஆர் எழுதிய உயில் பற்றி முதலில் வெளியே சொல்லி ஒட்டு மொத்த மீடியாவையும் சிறிது நேரம் தன் பக்கம் திருப்பியவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தான். அப்போது யாருடைய ஆதரவாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத கு.ப.கி., "எம்.ஜி.ஆர் உயில்படி அ.தி.மு.க தலைமையை அதன் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். 80 சதவீத தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தலைமைக்கு வர வேண்டும் என 1984-ல் எம்.ஜி.ஆர் எழுதிய உயிலில் கூறியுள்ளார். இதை மீறினால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார்.
கு.ப.கிருஷ்ணன் இப்படிச் சொன்னதில் எடப்பாடியாருக்கு ஏக வருத்தமாம். “கட்சியைவிட்டு வெளியே போய்விட்டு திரும்பி வந்தவரை மதித்து அவருக்கு நாம் தேர்தலில் சீட் கொடுத்தோம். ஆனால், அந்த விசுவாசம்கூட இல்லாமல் நமக்கெதிராகவே இப்படிப் பேசிவிட்டாரே” என தனக்கு நெருக்கமான வட்டத்தில் புலம்பிய இ.பி.எஸ், தனக்கான நேரம் வந்ததும் சமயம் பார்த்து கு.ப.கி-யை தூரத்தி விட்டார் என்கிறார்கள்.
ஒற்றைத் தலைமை வெடிக்கும்போது அ.தி.மு.க.,வில் இருந்துக்கொண்டே கலகக் குரல் எழுப்பிய கு.ப.கி., இப்போது எம்.ஜி.ஆர் உயில் பற்றி வாயே திறக்காமல் இருப்பது ஏன் என்றும் அ.தி.மு.க.,வுக்குள்ளேயே சிலர் அவரது வாயைக் கிளறுகிறார்களாம்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil