கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 9 பேர் விடுதலை

கும்பகோணம் பள்ளி தீவிபத்து குறித்த வழக்கில் 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து குறித்த வழக்கில் 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் தீ காயங்களுடன் மீட்கபட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பள்ளியின் நிறுவனர், அரசு அலுவலர்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை, பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், தஞ்சை மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜே.ராதாகிருஷ்ணன், முன்னாள் உதவி கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜி.மாதவன், முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் வி.பாலசுப்பிரமணியன், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் பி.தேவி, ஆர்.மகாலெட்சுமி, டி.அந்தோணியம்மாள், நகராட்சி முன்னாள் ஆணையர் ஆர். சத்தியமூர்த்தி, நகராட்சி முன்னாள் நகரமைப்பு அதிகாரி கே.முருகன் உள்ளிட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி புலவர் பழனிச்சாமி உள்பட 10 பேரும், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான புலவர் பழனிச்சாமிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை மாற்றி அமைப்பதாகவும், அதன்படி இதுவரை அவர் சிறையில் இருந்த தண்டனை காலம் போதுமானது. இரண்டாவது குற்றவாளி சரஸ்வதி மரணம் அடைந்தால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சமையலாளர் வசந்திக்கு எதிரான விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ப்படுகிறது. இருப்பினும் அந்த உத்தரவில் திருத்தம் செய்யப்படுகின்றது. அதன்படி, ஏற்கனவே சிறையில் இருந்த தண்டனை காலம் போதுமானது என்றும் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்த சந்தானலட்சுமி, கஜலட்சுமி, ஜெயசந்திரன், பாலாஜி, சிவபிரகாசம், தண்டாவன், துரைராஜ் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு விதிக்கபட்ட தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்வதாகவும். இதே போல் விசாரணை நீதிமன்றம் விடுவிப்பதை எதிர்த்து தொடர்ந்த மனுகள் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு மூலம் அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close