கும்பகோணம் கடப்பா வெங்கடேஷ் பட் சொல்வது போல் செய்வது மிகவும் ஈசி. இப்படி செய்து சாப்பிடுங்க.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு அல்லது சிறுபருப்பு - 1/4 கப்
உருளைக்கிழங்கு- 2
வெங்காயம் - 1
தக்காளி- 1
கறிவேப்பிலை - 2
கொத்தமல்லி இலைகள்
மஞ்சள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 1/2
உப்பு - சுவைக்கேற்ப
மசாலா தயார் செய்ய
தேங்காய் துருவல் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3
பெருஞ்சீரகம் அல்லது சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை மற்றும் கிராம் - 1/2 தேக்கரண்டி
பொட்டு கடலை - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 முதல் 4
செய்முறை: முதலில் ஒரு குக்கர் எடுத்து அதில் 1 கப் பாசிப்பருப்பை இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அதில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். அவற்றோடு நறுக்கிய வைத்துள்ள உருளை கிழங்கை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் அளவு வேக விடவும். இப்போது அவை நன்கு வெந்த பிறகு பாசி பருப்பு தனியாகவும், உருளை கிழங்கு தனியாகவும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அவை சூடு ஆறிய பிறகு, பாசிப்பருப்பை பருப்பு கடையும் மத்தை வைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். உருளை கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். அதன் பின்னர், மசாலா அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்சியில் இட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொறிய விட்டு, அவற்றோடு பட்டை கிராம்பு சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். சில நிமிடம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கவும். இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடியால் மூடி நன்கு கொதிக்க விடவும்.
அவை கொதித்து வந்த பிறகு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்த பிறகு கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு உருளைக்கிழங்கு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லி இலையையும், எலுமிச்சை சாறும் சேர்த்து கீழே இறக்கவும். இவற்றை உங்கள் காலை உணவுகளான இட்லி, தோசை, இடியப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்த்து ருசிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“