/indian-express-tamil/media/media_files/2025/01/25/1hGwy9NnFXbMULNbmwmh.jpeg)
இந்துக்களால் புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களைக் களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள்.
அதற்குச் சிவபெருமான் கும்பகோணத்தில் அக்னித்திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது ஐதீகம்.
இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்தத் தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.
வான் அறிவியல்படி பார்த்தால் சூரியனை விட மூன்று மடங்கு பெரியது மகா நட்சத்திரம். பூமியில் இருந்து அந்த நட்சத்திரம் 77 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒளியின் வேகத்தில் சென்றால் கூட மகா நட்சத்திரத்தை அடைய 77 ஆண்டுகள் ஆகும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் வந்தால் அது பவுர்ணமி. அந்த வரிசையில் மகா நட்சத்திரம் வந்தால் அது மாசி மகம். அது ஆண்டுக்கு ஒருமுறை வரும். ஆனால் மகாமகம் அன்று சூரியன், பூமி, சந்திரன், மகம் மற்றும் வியாழன் ஆகியவை நேர்கோட்டில் வருகின்றன. இதன் வானியல் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் மகாமகம் புனித நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
கும்பகோணத்தில் வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகத்துக்கான நாள் நிர்ணயம் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கும்பகோணம் மகாத்மியம் குறித்து தினகர சர்மாவும், பஞ்சாங்க கணிதம் குறித்து சென்னை பாம்பு பஞ்சாங்கம் விஜயராகவனும், குரு பெயா்ச்சி குறித்து ஸ்ரீரங்கம் கோயில் வாக்கிய பஞ்சாங்க ஆசிரியர் கோபால குட்டி சாஸ்திரி, ஆற்காடு சீதா ராமய்யர் பஞ்சாங்க ஆசிரியர் கே.என். சுந்தர்ராஜன் அய்யர், ஈரோடு சபரி பஞ்சாங்க ஆசிரியர் எஸ்.என். சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஏற்பாடுகளை ஸ்ரீ அபி முகேசுவரர் கோயில் குருக்களும், ஆகம வல்லுநருமான என். பிரசன்ன கணபதி சிவாச்சாரியார், ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் கோயில் என். தண்டபாணி சிவாச்சாரியார் செய்திருந்தனா்.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் 09.03.2028 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகா மக குளத்தை சுற்றி ஆங்காங்கே ஆக்கிரமிப்பு கடைகளும், சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. நாடு முழுவதிலிருந்தும் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை இன்னும் நடைபெறாதது வேதனை என்கின்றனர் அப்பகுதியினர்.
வட இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் கும்பமேளா உலக பிரசித்தி பெற்றதாகும். இதே போன்று தமிழகத்தின் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மகாமகம் விழா பிரசித்தி பெற்றது. இந்த நாளில் பல லட்சக் கணக்கான மக்கள் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மகா மகம் குளத்தில் புனித நீராடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.