எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியரை ‘விருந்து’ கொடுப்பதாக கூறி வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணின் சகோதரர் தனது மைத்துனருடன் சேர்ந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் அண்ணன், அண்ணனின் மைத்துனர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் அருகேயுள்ள விளந்தகண்டம் அய்யாகாலனியைச் சேர்ந்தவர் சரண்யா (28). இவருடைய சகோதரர் சக்திவேல் (38). சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் (28) சரண்யாவுக்கும் ரஞ்சித்துக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர்.
நர்சிங் படிப்பை முடித்த சரண்யா கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் அதே மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரை காதலித்துள்ளார். இதுபற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஏற்கெனவே பேசியபடி உறவினரான ரஞ்சித்துடன் திருமண நிச்சயம் செய்ய இருப்பதாக கூறி சரண்யாவை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இதையடுத்து உஷாரான சரண்யா தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் எதிர்ப்பை மீறி தனது காதலர் மோகனை ஐந்து நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை தனது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர் சக்திவேல், சரண்யாவையும் அவரது கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டு, தனது தங்கை சரண்யாவை தொடர்பு கொண்டு, அவரது கணவருடன் தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். சக்திவேல் கூறியதை உண்மையென நம்பிய சரண்யா தனது கணவர் மோகனுடன் தனது அண்ணன் சக்திவேலின் வீட்டிற்கு இன்று பிற்பகல் விருந்து சாப்பிட வந்தார். அப்போது, சக்திவேல், புதுமண தம்பதியருக்கு கிராமத்து வழக்கப்படி குடிக்க சொம்பில் தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீரைக் குடிக்க முயன்றபோது புதுமணத் தம்பதியர் சரண்யா மற்றும் மோகனை, சக்திவேலும் அவரது மைத்துனர் ரஞ்சித்தும் மறைத்து வைத்திருந்த அரவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சரண்யாவும் அவரது கணவர் மோகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, சக்திவேலும் ரஞ்சித்தும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சோழபுரம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், சரண்யா மற்றும் மோகனின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சக்திவேலும் ரஞ்சித்தும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இரட்டை கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளி ப்ரியா காந்தபுனேனி, கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு கொலையான சரண்யாவின் வீட்டிற்கு சென்று அவரது தாய் தேன்மொழியிடம் விசாரணை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. ரவளி ப்ரியா, இந்த இரட்டை கொலை சம்பந்தமாக 2 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.