குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருவதாக முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதி உள்ளது. நேற்றைய தினம் (மார்ச் 11) இந்த பகுதியில் 25 கல்லூரி மாணவிகள் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட 25 மாணவிகளும் இதில் சிக்கினர்.
குரங்கணி மலை தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ”குரங்கனி மலைப்பகுதி தீ விபத்து குறித்து மனவேதனை அடைந்தேன்,"போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குரங்கணியில் மர்ம நபர்களால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது, குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்படுவர். குரங்கணி மலைப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடக்கும். தீயணைப்பு , வருவாய், வனத்துறையினர், காவல்துறையினர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மீட்புப் பணிக்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ஹெலிகாப்டர் கோரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார் .