சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு தி.மு.க நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 'இதுபோன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்' என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றசாட்டு எழுந்திருக்கிறது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தி.மு.க-வின் பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய தி.மு.க நிர்வாகிகள்… பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடமிருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய இந்தக் கையாலாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.
இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,
நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.
மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
என்று கூறியுள்ளார்.
இதனிடையே, பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு, இது போன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம் என்று விமர்சனம் செய்துள்ளார்.
நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இது போன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.