தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியதாக வெளியான வீடியோ குறித்து, பெண்களை இழிவாகப் பேசுவதுதான் திராவிட மாடலா? என்னை சீண்டி பார்க்காதீங்க தாங்க மாட்டீர்கள் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ கண்ணீர் விட்ட அதே நேரத்தில் ஆவேசமாகப் பேசினார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ சென்னை ஆர்.ஏ. புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொது மேடையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ குறித்து அவதூறாகப் பேசியதாக வெளியான வீடியோ குறித்து கண்ணீர் விட்டுப் பேசிய அதே நேரத்தில் ஆவேசமாகவும் பேசினார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற ஒரு பேச்சாளர் ஒரு மேடையில் என்னைப் பற்றி ரொம்ப அவதூறாக, கேவலமாக, அருவெறுப்பாக, தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். ஒரு போராட்ட தளத்தில் இருக்கிற பேச்சாளர் இப்படி அடிக்கடி இந்த மாதிரி பொண்ணுங்க விஷயத்தில் கேவலமாகப் பேசுறதும் வாய்க்கு வந்தபடி பேசுறதும், ஏற்கெனவே கட்சியில் சஸ்பெண்ட் ஆகி, மறுபடியும் கெஞ்சி கூத்தாடி கட்சியில் சேர்ந்ததுக்கு அப்புறம், மறுபடியும் ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி பேசியிருக்கிறார். இதே மாதிரி இதற்கு முன்னாடி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசியதற்காக, அப்போது நான் மகளிர் ஆணையத்தில் கிடையாது. அந்த நேரத்தில் மகளிர் ஆணையத்தில் புகார் பதிவு செய்து அவர் டெல்லி வரைக்கும் போய், எழுதி மன்னிப்பு கேட்டார். எந்த பொண்ணுங்களப் பத்தியும் இப்படி அவதூறாகப் பேசமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார். இப்போது இவர் இப்படி பேசுவதனால், போனால் போகிறது விட்டுவிடலாம், திராவிட மாடல் இதுதான், பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசுவது, இழிவாகப் பேசுவது, புது திராவிட மாடல் இதுதான் என்று நான் புரிஞ்சுக்கிறேன். இதற்கு மேல இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், ஒரு மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, ஒரு தேசத்தோட உறுப்பினராக நான் இருக்கும்போது என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேசும்போது நான் போனா போகிறது என்று விட்டுவிட்டால் நம்ம நாட்டில் இருக்கிற மற்ற பெண்களை நினைத்துப் பாருங்கள், நம்ம நாட்டில் எங்கே ஒரு பிரச்னை நடந்தாலும் அந்த புகார் எனக்கு வரும். சமீபத்தில் டிஜிபி, ஏடிஜிப் இருக்கிற கம்ப்ளைண்ட் என்ன ஆச்சு என்று கேட்பதற்கு நான் போயிருந்தேன்.
பெண்களைப் பாதுகாப்பதற்காக நான் வேலை செய்யும்போது என்னைப் பற்றி ஒருவர் அவதுறாக பேசும்போது அதை தெரியாத மாதிரி போனா போகிறது என்று விட்டுவிட்டால், பொதுவில் பெண்கள் உங்களுக்காக நீங்கள் சண்டை போடாவிட்டால் நீங்கள் எப்படி எங்களுக்காக சண்டை போட முடியும் என்ற சந்தேகம் வரும். ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு இழிவாக, தரைக்குறைவாகப் பேசுவதற்கு யாருக்குமே அனுமதி கிடையாது. பெண்களை அவதூறாகப் பேச யார் உரிமை கொடுத்தது?
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல. பென்களை அவதூறாகப் பேச உரிமை கொடுத்தது யார்? ஒரு பெண்ணாக யாரும் என்னை சீண்டிப் பார்க்காதீர்கள். பெண்களை கொச்சைப் படுத்துவதுதான் திராவிட மாடலா? பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதை முதல்வர் அனுமதிக்கக் கூடாது. பெண்களை இழிவுபடுத்துவோர் எந்த கட்சியினராக இருந்தாலும் அது தவறுதான். பெண்களை அவதூறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக பதில் கருத்தை தெரிவியுங்கள். என்னை சீண்டி பார்க்காதீங்க; தாங்கமாட்டீர்கள்; தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்னமூர்த்தி பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தும்” என்று கூறினார்.
இதனிடையே, தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்.” என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.