கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ரோட்டரி மாவட்ட மாநாட்டில் நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான குஷ்பூ கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்றார்.
அப்போது, "எல்லா இடத்திலும் பிரச்சனைகள் உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் போது அரசியல் விவாதம் ஆக்காதீர்கள். தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி வருகிறதா?
பெண்களை அழைத்து இதற்கான தீர்வை ஏற்படுத்த குழு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் பெண்களை அழைத்து, இந்த பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹேமா கமிட்டி போல் தமிழகத்தில் நடிகர்கள் சங்கம் சார்பில் ரோகிணி மூலம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நிறைய யூடியூபர்ஸ் எங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். தமிழகத்தில் ரூ. 2000-க்காக பெண்களை பற்றி யூடியூபர்ஸ் அவதூறாக பேசும் பிரச்சனைகள் உள்ளது. தங்கள் வீட்டில் பெண்கள் இருப்பதை மறந்து இவ்வாறு பேசுகின்றனர். தமிழகத்தில் யூடியூபர்ஸ்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடப்பது கஷ்டமாக உள்ளது. போக்சோ பிரச்சனைகள், 90% குடும்பத்தில் நெருக்கமானவர்கள், அறிந்தவர்களால் தான் ஏற்படுகிறது. இதை பற்றி பேச வேண்டும். புகார்கள் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
விஜய் மிகப்பெரிய நடிகர். அவருக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு உள்ளது. தற்போது விஜய் அரசியலில் இருப்பதால் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.
செய்தி - பி.ரஹ்மான்