இளங்கோவன் முன்னாள் தலைவர் அல்ல... எந்நாளும் அவர்தான் தலைவர்! குஷ்பூ ரிட்டர்ன்ஸ்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரசில் முன்னாள் தலைவர் அல்ல. எந்நாளும் அவர் தலைவர்தான் என இந்திரா நூற்றாண்டு விழாவில் நடிகை குஷ்பூ பேசினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரசில் முன்னாள் தலைவர் அல்ல. எந்நாளும் அவர் தலைவர்தான் என இந்திரா நூற்றாண்டு விழாவில் நடிகை குஷ்பூ பேசினார்.

இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை சென்னையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தனியாகவும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் தனியாகவும் கொண்டாடினார்கள். சென்னை போரூரில் ஈவிகேஎஸ் அணியினர் நடத்திய விழாவில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், நடிகை குஷ்பூ, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பிரபரலங்கள் கலந்து கொண்டனர்.

இங்கு நலத்திட்ட உதவிகளை இளங்கோவன் வழங்கினார். இளங்கோவன், குஷ்பூ உள்ளிட்ட தலைவர்களை மொத்தமாக நிறுத்தி ஒரே மாலையை அவர்களுக்கு அணிவித்து மகிழ்ந்தார்கள் தொண்டர்கள். இந்த விழாவில் குஷ்பூ பேசியதாவது:

தலைவர் இளங்கோவன், தமிழக காங்கிரசில் முன்னாள் தலைவர் அல்ல. எந்நாளும் அவர் தலைவர்தான். நான் இந்த இயக்கத்துக்கு வந்ததற்கும் இன்று உங்கள் முன்பு பேசிக் கொண்டிருப்பதற்கும் காரணம் அவர்தான்.

இந்திரா காந்தியின் வாழ்க்கை ஒரு வரலாறு. இன்று யார் யாரெல்லாமோ தேசப்பற்று பற்றி பேசு கிறார்கள். ஆனால் இந்திரா காந்தி 5 வயதாக இருக்கும் போது அவரிடம் உனக்கு சுதந்திரம் வேண்டுமா? வெளிநாட்டு பொம்மை வேண்டுமா என்று கேட்ட போது எனக்கு சுதந்திரம் தான் வேண்டும் என்று கூறி இருக்கிறார். அப்படிப்பட்ட தேசப் பற்றுமிக்க தலைவர்.

பிரதமர் மோடி ஸ்டார்ட் ஆப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று திட்டங்களை அறிவிக்கிறார். பிறகு வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார். அவர் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராகத்தான் பார்க்கப்படுகிறார். மோடியின் ஆட்சியில் மக்கள் வேதனைப்படுகின்றனர்.

குஜராத் தேர்தலை கண்டு மோடி கலங்கிப்போய் இருக்கிறார். அகில இந்திய அளவில்தான் அப்படி என்றால் தமிழகத்தை பாருங்கள். இங்கு ஒரு சர்க்கஸ் ஆட்சி, ஜோக்கர் ஆட்சி நடக்கிறது. இவர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. ஒரே நேரத்தில் நீயா, நானா என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது ராமர்-லட்சுமணரை போல செயல்படுவோம் என்று தோளில் கைபோட்டுக் கொண்டு அலைகிறார்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கின்ற இந்த அலங்கோலமான ஆட்சிகள் தூக்கி எறியப்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அண்மையில் உடல் நலப் பிரச்னை காரணமாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குஷ்பூ, அதன்பிறகு பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க இளங்கோவன் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் தான் என்றும் தலைவர் என அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழா நடந்தது. புலவர் ராமலிங்கம் கலந்துகொண்ட பட்டிமன்றம், ‘இந்திராகாந்தியின் நிலைத்த புகழுக்கு காரணம் அவரது வீரமே, சேவையே’ என்ற தலைப்பில் நடந்தது.

நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நாசே.ராஜேஷ், வி.ஆர்.சிவராமன், ஏ.ஜி.சிதம்பரம், ரங்கபாஷ்யம், சக்கரபாணி ரெட்டியார், நாஞ்சில் பிரசாத், கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் சுரேஷ், எஸ்.டி.செழியன், ஏழுமலை, பாலமுருகன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ராகுல்காந்தி, மணிபால் ஆகியோர் கலந்து கொண்டனர். சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவைவிட போரூர் விழா கலகலப்பாகவும், விமரிசையாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close