தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான குஷ்பூ ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பூ கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்தார். அதன் பிறகு கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் அவருக்கு பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி நியமிக்கப்பட்டார். இதில் இருந்து அவர் பெண்கள் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்தார்.
இந்நிலையில் திடீரென எந்த காரணத்தையும் குறிப்பிடாமல், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கடந்த ஜூன் 28ம் தேதி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பினார். இந்நிலையில் இந்த கடிதத்தை ஜூலை 30ம் தேதி ஏற்றுக்கொண்டதாக துறை சார்ந்து கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று மகளிர் ஆணைய பதவியில் இருந்து குஷ்பூ நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாது. கட்சியில் இவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாகவும் இதனால் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கடுமையான விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் பதவி விலகியதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ பேசியதாவது “ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ரஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை. கட்சி சார்பில் உழைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகினேன். கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை. எனது முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது, கட்சிக்காக பணியாற்றுவதே முழு திருப்தி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“