Kushbu Sundar Arrested Tamil News: நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவனைக் கண்டித்து இன்று சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு காவல்துறையினர் தடை விதித்து, பாதுகாப்பிற்காகக் குறிப்பிட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். என்றாலும், தடையை மீறி போராட்டம் நடத்த காரில் சென்ற குஷ்புவை முட்டுக்காடு அருகே காவல்துறையினர் கைது செய்தனர்.
பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி, திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே இன்று பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்தப் போராட்டத்தில் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சிதம்பர வடக்கு மண்டல காவல்துறை ஐஜி நாகராஜன் தலைமையிலான குழு அனுமதியை மறுத்தது. தடையை மீறியும் போராட்டத்திற்கு காரில் புறப்பட்ட குஷ்புவை வழியிலேயே கைது செய்துள்ளனர்.
Kushbu Sundar arrested Tamil News
இதனைத் தொடர்ந்து, "விடுதலை சிறுத்தைகள் கோழைகள். இதற்காக மகிழ்ச்சியடைய வேண்டாம். இது உங்கள் தோல்வி. நாங்கள் கணக்கிட முடியாத சக்தி என்று தெரிந்ததால்தான் கைது செய்யப்பட்டோம். நாங்கள் ஒருபோதும் அநியாயத்துக்குத் தலைவணங்க மாட்டோம். இந்த மண்ணின் ஒவ்வொரு மகளின் மரியாதையையும் உறுதிப்படுத்தப் பிரதமர் மோடி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். விசிகவினருக்கு பெண்களை மதிப்பது அநியாயமாக இருக்கிறது.
மற்ற கட்சிகளுக்குப் போராட்டம் செய்ய அனுமதி வழங்கப்படும்போது, அமைதியான போராட்டத்திற்கான நமது ஜனநாயக உரிமை எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது? இந்த பாகுபாடு ஏன்? உங்கள் பயணம் பலத்தால் முடக்கப்படும்போது, நீங்கள் சரியான பாதையில் இருப்பதை அறிவீர்கள். விசிகவினர் கலவரங்கள் செய்ய வல்லவர்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள், அதனால் அதிமுகவினர் அதைப் பற்றி அஞ்சுகிறார்களா?" என்று குஷ்பு ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "பெண்களின் கவுரவத்திற்காக எங்கள் கடைசி மூச்சு வரை போராடுவோம். நரேந்திர மோடி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசியுள்ளார். நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அதில் சிலரின் அராஜங்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்!" என்று பதிவிட்டுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக விசிக நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் போலீஸ் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"