தமிழக அரசையும் அதன் உயர் அதிகாரிகளையும், சட்ட விரோத குட்கா விவகாரம் போட்டு உலுக்கி எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கும் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களோடு வருமான வரித்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் அனுப்பிய கடிதம் காணவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016ம் ஆண்டில், சென்னையை அடுத்த செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குட்கா தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட கணக்குப் பதிவேட்டில், சென்னை மாநகர ஆணையராக இருந்த ஜார்ஜ் மற்றும் டிகே.ராஜேந்திரன் ஆகியோர் மாதந்தோறும் லட்சக்கணக்கில் மாமூல் வாங்கிய விவகாரம் அம்பலமானது. அதிகாரிகள் இல்லாமல், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 65 லட்சத்துக்கு மேல் லஞ்சமாக பெற்றிருந்த விவகாரமும் தெரிய வந்தது.
இது குறித்த தகவல்கள் இணைய தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கசிந்தாலும், பெரிய அளவில் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில்தான், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக இருந்த டிகே.ராஜேந்திரனக்கு இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப் போவதாக தகவல்கள் பரவின. பதவியில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெற ஒரு மாதத்துக்கு முன்னதாகவே முடிவு செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் டிகே.ராஜேந்திரன் விவகாரத்தில் மட்டும் அவருக்கு பணி நீட்டிப்பு கிடைக்குமா, அல்லது வேறு ஒருவர் நீடிப்பாரா என்ற சஸ்பென்ஸ் இருந்தது. இந்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே, இந்து நாளேட்டில், குட்கா விவகாரத்தில், தமிழகத்தின் உயர் அதிகாரிகள் பெருமளவில் லஞ்சம் பெற்றுள்ளனர் என்ற செய்தி வெளியாக, அதைத் தொடர்ந்து, ஒரு ஆங்கில தொலைக்காட்சியில், மாமூல் வாங்கிய பட்டியலே வெளியானது.
இந்தச் செய்திகள் வெளியானதும், குட்கா வியாபாரிகளிடம் லட்சக் கணக்கில் மாமூல் பெற்ற டிகே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பா என்று சர்ச்சைகள் கச்சை கட்டின. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலினும் சட்டப்பேரவையில் தொடர்ந்து பிரச்சினை எழுப்பினார். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் தொடர்ந்து அறிக்கைகள் மூலம் பிரச்சினையை எழுப்பினர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த அறிக்கைகள் போராட்டங்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. குட்கா ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அதனால் வேறு விசாரணை எதுவும் வேண்டியதில்லை என்று சாதித்தார். பிடித்த முயலுக்கு மூன்றே மூன்று கால் என்று, டிகே.ராஜேந்திரனுக்கே பணி நீட்டிப்பு வழங்கி டிஜிபியாக்கினார். இந்த சிக்கல் காரணமாக, முதன் முறையாக நள்ளிரவு 11.30 மணிக்கு டிஜிபியாக பதவியேற்றார்.
விவகாரம் இத்தோடு முடிந்து விட்டது என்று டிகே.ராஜேந்திரன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில்தான் மதுரையில், சிபிஐ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர், டிகே.ராஜேந்திரன் நியமனம் முறைகேடானது, குட்கா ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி வரும் விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பொது நல வழக்கை தாக்கல் செய்தார். இந்த பொதுநல வழக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் பெறாது என்று அரசுத் தரப்பில் முதலில் அலட்சியமாகத்தான் இருந்தனர்.
ஆனால் நீதிபதிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வருமான வரித்துறை தலைமை ஆணையர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் குட்கா ஊழல் தொடர்பாக அவர்களிடம் உள்ள ஆவணங்களை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டபோது, ஒட்டுமொத்த தமிழக அரசே ஆடித்தான் போனது. வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு, அடுத்த விசாரணையின்போது, அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமியை ஆஜராக வைத்தது. மனுதாரர் தரப்பில் வருமான வரித்துறை குட்கா ஊழல் தொடர்பாக நடத்திய விசாரணை குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க, தலைமை வழக்கறிஞரோ, குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித் துறை எந்தக் கடிதத்தையும் எழுதவேயில்லை என்று சாதித்தார். அவர் சொல்லும் கூற்றை நம்ப மறுத்த நீதிபதிகள், வருமான வரித்துறையிடமிருந்து கடிதமே வரவில்லை என்று, ஒரு பிரமாண பத்திரத்தை தலைமைச் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பொதுவாக ஒரு நேர்மையான அதிகாரி என்று பரவலாக அறியப்படும் கிரிஜா வைத்தியநாதன், குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையிடமிருந்து கடிதமே வர வில்லை என்று ஒரு முழுமையான பொய்யை பிரமாண வாக்குமூலமாக தாக்கல் செய்தார். இந்த பிரமாண வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இதற்கு பின்னர்தான் அடுத்த பூதம் வெளி வந்தது. தீர்ப்பு ஒத்தி வைத்த பிறகு, இந்து நாளேடு வெளியிட்ட செய்தியில், வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், 12 ஆகஸ்ட் 2016 அன்று அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவை நேரடியாக சந்தித்து, வருமான வரித்துறையின் 11 ஆகஸ்ட் 2016 நாளிட்ட கடிதத்தை நேரில் அளித்து அதற்கு ஒப்புகையும் பெற்றார். இதே போல அப்போதைய டிஜிபி அஷோக் குமாரிடமும் இந்த அறிக்கை நேரில் வழங்கப்பட்டது. ஆனால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் வருமான வரித்துறையிடமிருந்து 9 ஜுலை 2016 நாளிட்ட எந்தக் கடிதமும் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் வந்த கடிதம் குறித்து அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
வருமான வரித் துறையினர் தங்கள் வசம் குட்கா ஊழல் குறித்து இருக்கும் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தின் முன் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ள நிலையில்தான், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இப்படியொரு பொய் வாக்குமூலத்தை தாக்கல் செய்து பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
அப்போது, தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவிடம் வருமான வரித்துறை புலனாய்வு இயக்குநர் பாலகிருஷ்ணன் நேரில் அளித்த கடிதம் தலைமைச் செயலகத்தில் காணவில்லை என்ற திடுக்கிடும் தகவல் தற்பாது வெளியாகியுள்ளது. தலைமைச் செயலகம் மட்டும் அல்லாமல், டிஜிபி அலுவலகத்திலும் இந்த கடிதம் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. பொய்யான வாக்குமூலம் தாக்கல் செய்ததற்காக, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதிலிருந்து தப்பிப்பதற்காக, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் வருமான வரித்துறை கடிதம் என்பபடி காணாமல் போனது என்று ஒரு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற உத்தரவிட்டால், இதற்கு முன் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் பெரும் சிக்கலில் மாட்டுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருமான வரித்துறையின் குட்கா தொடர்பான கடிதம் தன்னிடம் கிடைத்ததும், அதில் சம்பந்தப்பட்ட இரண்டு முன்னாள் காவல்துறை ஆணையர்களையும் அழைத்து விசாரித்துள்ளார் ராம் மோகன ராவ். அப்போது, தங்களை காப்பாற்றும்படி இரு ஐபிஎஸ் அதிகாரிகளும் விடுத்த கோரிக்கையை அடுத்து, குட்கா வியாபாரியிடமிருந்து ஒரு பெருந்தொகையை இரு ஐபிஎஸ் அதிகாரிகளும் ராம் மோகன ராவுக்கு பெற்றுத் தந்துள்ளனர். இதன் காரணமாகத்தான், வருமான வரித் துறையின் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் ஊறப் போட்டுள்ளார் முன்னாள் தலைமைச் செயலர்.
ஏற்கனவே இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குட்கா விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்டுள்ள நிலையில், அடுத்தாக கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ராம் மோகன ராவ் என்ற இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் சிக்கவுள்ளார்கள் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த குட்கா இன்னும் எத்தனைப் பேரை காவு வாங்கப் போகிறதோ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.