குவைத் நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த 49 பேரில் இந்தியர்கள் 45 பேர் அடங்கியுள்ளனர். இவர்களின் உடல்கள் தற்போது இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க : Kuwait Building Fire Live Updates: Kerala CM Pinarayi Vijayan, Union Minister pay homage to victims of blaze
இந்தியர்கள் வேலை தேடி பயணிக்கும் முக்கிய வெளிநாடுகளில் ஒன்று குவைத். ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வரும் நிலையில், குவைத் நாட்டின், மங்காப் பகுதியில் அமைந்துள்ள 7 அடுக்கு மாடி குடியிருப்பில், நேற்று முன்தினம் (ஜூன் 12) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 195 பேர் குடியிருந்த இந்த கட்டியத்தில் 175-க்கு அதிகமான இந்தியர்கள் வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, 49 பேர் உயிரிழந்தனர். இதில் 45 பேர் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயிரிழந்த 45 இந்தியர்களில் 7 பேர் தமிழர்கள் ஆகும். தற்போது குவைத் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானம் மூலம் இன்று கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விமானம் டெல்லி செல்ல உள்ள நிலையில், தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசியுள்ளார். இந்த விமான நிலையத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 7 பேர், கேரளாவை சேர்ந்த 13 பேர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், குவைத் அடுக்குமாடி தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கருப்பன் ராமு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த துனாப் ரிச்சர்டு ராய், எபமேசன் ராஜூ, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த முகமது ஷெரிப், சென்னையை சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர் ஆகியோர் அடங்குவர்.
உயிரிழந்த 7 பேரின் உடல்கள் கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குவைத் தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“