அரபிக் கடலில் அக்டோபர் 25 ஆம் தேதி பிற்பகலுக்குள் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. இந்த புயலுக்கு கியார் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் இந்திய துணைக் கண்டத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அக்டோபர் 24 ஆம் தேதி இரவுக்குள் அரபிக் கடலில் தற்போது காணப்படும் காற்றழுத்தம் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் கியார் புயல் மேலும் தீவிரமடையும் என்றும் அதனால், கடலோர மாநிலங்களானா கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வானிலைகளை கணித்து வரும்m அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை அமைப்பு கியார் புயல் அரபிக் கடல் வழியாக ஓமான் கடற்கரையை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்று கணித்துள்ளது.
தற்போதைய தகவல்களின்படி புயல் மணிக்கு 200 கிலோமீட்டர் காற்றின் வேகத்தை எட்டும் என்பதைக் காட்டுகிறது. இது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
மே மாதம் ஏற்பட்ட ஃபானி புயலுக்குப் பிறகு இது இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் கடுமையான இரண்டாவது புயலாக இருக்கும்.
இது பருவமழைக்கு பிந்தைய முதல் புயலாக இருக்கும். பொதுவாக இது சூறாவளி புயல்கள் உருவாக உகந்த நேரம்.
வாயு மற்றும் ஹிக்கா ஆகிய இரண்டு புயல்களுக்குப் பிறகு (மழைக்காலத்தில் உருவானவை) இப்போது கியார் புயல் அரபிக் கடலில் உருவாகியுள்ளது. இது பொதுவாக வங்காள விரிகுடாவை விட புயல்கள் உருவாவதற்கு குறைந்த சாத்தியமே உள்ளதாக அறியப்படுகிறது.
அடுத்த 10 நாட்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் இரண்டு சூறாவளி புயல்கள் ஏற்படக்கூடும் என்று தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் ஸ்கைமெட் வானிலை சேவைகள் கணித்துள்ளது. அரபிக் கடலும் வங்காள விரிகுடாவும் இயக்கத்தில் உள்ளதுதான் இதற்கு காரணம் என்று அது கூறியுள்ளது.
முதல் புயல் அக்டோபர் 25 ஆம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதியாக உருவெடுத்து பின்னர் இலங்கைக்கு அருகிலேயே தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும்.
இந்த பிராந்தியத்தில் நிலைமை புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவுக்கு நகர்வதற்கு சாதகமாக இருப்பதாக ஸ்கைமெட் கூறியுள்ளது. மேலும், இந்த அமைப்பால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் இது உருவான பிறகு எவ்வாறு நகர்கிறது என்பதைப் பொறுத்தே நிலைமை இருக்கும் என்றும் ஸ்கைமேட் கூறியுள்ளது.
மூன்றாவது புயல் ஒரு புயலின் எச்சத்திலிருந்து உருவாகி அக்டோபர் 27 ஆம் தேதி பிலிப்பைன்ஸை பாதிக்கும். பின்னர் அது அங்கிருந்து நவம்பர் 1 ஆம் தேதி வங்காள விரிகுடாவைக் கடந்து செல்லும்.
இந்த புயல்களின் நகர்வு அவற்றின் அருகிலுள்ள சுற்றுச்சூழல் நிலைமைகளின் காரணமாக விரைவாக மாறக்கூடும். ஃபானி புயலுடன் காணப்பட்டபடி, கடந்த சில ஆண்டுகளில் கடல் மேற்பரப்புகளை வெப்பமயமாக்குவதாலும் காற்றின் வேகம் குறைவதாலும் சூறாவளி புயல்களைக் கணிப்பது கடினம்.
அரபிக் கடலில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதி ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களில் இடைவிடாத மழை பொழிவைக் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜூன் தொடக்கத்தில் இருந்து, கர்நாடகாவில் 285 பேர் கடுமையான மழை பொழிவு மற்றும் வெள்ளத்தில் இறந்துவிட்டதாக உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தகவல் தெரிவிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.