பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாஜகவில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளில் இருந்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதிலும் முன்னதாக ராஜ்ய சபா எம்.பியாக நியமனம் செய்யப்பட்டதிலும், பாஜக மூத்த தலைவர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பதிலாக நடந்துள்ளது என்பது ஒரு தற்செயலான அதிசய ஒற்றுமை என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இல. கணேசன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் தமிழகத்தில் பாஜக உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புகைச்சலை சரி செய்ததாகத் தெரிகிறது. சமீப ஆண்டுகளாக தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு எந்த பதவியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று முணுமுணுப்புகள் இருந்தன.
இந்த நிலையில்தான், இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் புதியதாக இணைந்தவர்கள்கூட திடீரென உயர் பதவிகளை அடைய முடியும் என்ற கருத்து உருவாகியுள்ளது. இதற்கு காரணம், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன், சில மாதங்களிலேயே பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார். அவர் பாஜக தலைவராக சிறப்பாக செயல்பட்டதையடுத்து அவர் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
அதே போல, பாஜகவைச் சேர்ந்த எல்.முருகன், முதலில் தேசிய எஸ்சி ஆணையத்தின் தலைவராக இருந்தார். பின்னர், அவர் பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். வேல் யாத்திரை மூலம் தமிழக அரசியலில் பாஜகவை கவனம் பெற வைத்தார்.
இதையடுத்து, அவருக்கு நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த எல்.முருகன், தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவின் அரசியல் நகர்வுகளை நகர்த்தி வந்தார். இந்த சூழலில்தான், பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகன் இடம்பிடித்தார். மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு, சில மாதங்களுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பாஜக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், எல்.முருகன் மத்திய அமைச்சரானதால் காலியான மாநில தலைவர் பதவிக்கு அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக பாஜகவில் பல மூத்த தலைவர்கள் இருந்தாலும் புதியவர்களுக்கு மாநில தலைவர், மத்திய அமைச்சர், ஆளுநர் பதவி அளிக்கப்படுகிறது என்று மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மத்தியில் முனுமுனுப்பும் சலசலப்பும் இருந்துவந்தது. இதை சரி செய்யும் விதமாகத்தான், பாஜக தேசிய தலைமை, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசனை ஆளுநராக நியமனம் செய்துள்ளது.
பாஜக ஆட்சிக் காலத்தில் இதுவரை தமிழகத்தில் இருந்து 3 தலைவர்கள் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். வி.சண்முகநாதன் மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இப்போது இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இல.கணேசன் ராஜ்ய சபா எம்.பியாக இருந்தார்.
தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து பாஜகவை வளர்த்த இல. கணேசன், ராஜ்ய சபா எம்.பியாக நியமனம் செய்யப்பட்ட போதும் தற்போது மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளபோதும், அப்போதும் இப்போதும் ஒரு அதிசயமான தற்செயலான ஒற்றுமை நடந்துள்ளது.
2017ம் ஆண்டில், ராஜ்யசபா துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட காலி இடத்தை தொடர்ந்து, இல. கணேசன் மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே போல, இப்போது மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பதிலாக இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது ஒரு விசித்திரமான தற்செயலான அதிசய ஒற்றுமை நிகழ்வு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.