மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநர் இல. கணேசனின் சகோதரர் இல. கோபாலனின் 80வது பிறந்த நாள் விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இல. கணேசன் இல்ல விழாவில் பங்கேற்று வாழ்த்திய மம்தா பானர்ஜி உற்சாகமாக செண்டை மேளம் வாசித்தார். இந்த விழாவுக்கு வருகை தந்த மு.க. ஸ்டாலினை இல. கணேசன் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
மணிப்பூர் ஆளுநர் மற்றும் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் 80வது பிறந்தநாள் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 3) நடைபெற்றது.
சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றே (நவம்பர் 2) சென்னை வந்தார். பின்னர், அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் சதாபிஷேக விழாவில் மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அவர் வாயிலில் செண்டை மேளம் வாசித்தவர்கள் அருகே சென்று அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக செண்டை மேளம் வாசித்தார்.
அதே போல, இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலுவும் கலந்துகொண்டர். விழாவுக்கு வருகை தந்த மு.க. ஸ்டாலினை இல. கணேசன் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். டி.ஆர். பாலுவை தோளில் கைபோட்டு தழுவி அழைத்துச் சென்றார்.
மேலும், இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்தினார். பின்னர் புறப்பட்டுச் செல்லும்போது அங்கே இருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இல. கணேசன் இல்ல விழாவில், மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் மட்டுமில்லாமல், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"