சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகை முன்பு இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த நிலையில், “தமிழ்நாட்டில் ஆளுனருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “தமிழ்நாட்டில் ஆளுனருக்கே பாதுகாப்பற்ற சூழல் இருக்கும்போது, சாதாரண மனிதரின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியின் பின்னால் இருப்பது யார்? அந்த குற்றவாளியை இயக்கியது யார்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
தமிழ்நாடு அரசு இதனை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது அந்த நபர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 3 குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஓ.பி.எஸ், “ஆளுநர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு துணிச்சல் ரவுடிகளுக்கு வந்திருக்கிறதென்றால், இதற்குக் காரணம் வன்முறையாளர்கள்மீது மென்மையானப் போக்கைக் தி.மு.க. அரசு கடைபிடிப்பதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“