பெண் எஸ்.பிக்கு ரவுடி கொலை மிரட்டல்... சினிமா வில்லன்களே தோற்றுவிட்டார்கள்!

மதுரை சிறைத்துறை எஸ்பிக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் எஸ்.பிக்கு ரவுடி கொலை மிரட்டல் :

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த வாரம் சிறையில் சோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரைகள் அதிகம் தரும்படி வற்புறுத்தியுள்ளாராம். ஆனால் அந்த டாக்டர் தூக்க மாத்திரைகள் அதிகம் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சட்டையை கழற்றி டாக்டர் முகத்தில் வீசினார். இதுகுறித்து டாக்டர் புகாரில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சிறை கமாண்டோக்களை அனுப்பி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் அன்றிரவே அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

வெளியே வந்த அண்ணன், தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த விஷயத்தை கூற, கோவமடைந்த புல்லர் நாகராஜன் மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா மற்றும் டாக்டருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

அதில், “கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுகிறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சு இருக்கீங்க? மதுரை ஜெயிலை பொருத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா…?

உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க? நாங்க திருந்தி படிச்சு இப்ப பெரிய ஆளாக இருக்கோம். கைதி யாருக்காவது பிரச்னை வரட்டும். நீ என்ன செய்தியோ, அதையே நான் செய்ய வேண்டியிருக்கும்.

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ அதை பத்தி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான். மேம், உங்களுக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி தர்ரேன். தலைமை காவலர் பழனிக்குமார் இருக்காரே? கஞ்சா கடத்துறவரு… அவரை வச்சு கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீங்களே? இதற்கு வெட்கமா இல்லையா? இதை விட்டு வேறு வேலையை பார்த்துடலாம். இப்ப பேசறேன்லே… ஏதாவது செய்து பாருங்கள். உங்களால முடியாது.

நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது. நீங்க எப்படியும் வெளியில் வந்து தானே ஆகணும். நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். பயலுக ஏதாவது செய்திடுவாங்க.. அப்புறம் லாரி உங்க மேல கூட ஏறலாம். பொம்பளையாக இருக்கீங்க… திருந்துங்க… ” என்று பேசியுள்ளார்.

இந்தக் கொலை மிரட்டல் வைரலாக பரவி வருவது சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close